ஐங்குறுநூறு - முன்னுரை



“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று) 

ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தா

ரேத்துங் கலியோ டகம்புறமென்(று) 

இத்திறத்த எட்டுத் தொகை” 

எனும் இன்னிசை வெண்பாவை நோக்க, எட்டுத்தொகை எனும் சங்கப் பாடல்களில் மூன்றாவதாக வைத்துப் போற்றப்படுவது ‘ஐங்குறுநூறு’ என அறிகிறோம். 

இவ் வைங்குறுநூற்றுப் பாடல்களையே விளக்கமாகவும், பொருள் நயம் சுட்டிக் காட்டியும், தமிழர் பண்பாட்டு வழக்காற்றை எடுத்துரைத்தும் எழுத விழைந்த மனத்தினால், தொடராக இங்கே தரத் தொடங்குகிறேன். 

ஐங்குறுநூற்றின் வரலாறு : கடைச் சங்க காலத்தே, சேரமன்னர் தோன்றலாகக் ‘கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை’ எனும் மன்னர் புகழ்மிக வாழ்ந்த முடிவேந்தர்களுள் ஒருவர் என அறிகிறோம். இவருடைய விருப்பத்தின்பேரில், ‘புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்’ எனும் புலவர் கொண்ட பணியின் அருமையைத் தலைமேற்கொண்டு ஐந்து நல்லிசைப் புலவர்கள் சிறப்பான நூறு நூறு பாடல்களாகத் தந்ததே ‘ஐங்குறுநூறு’ எனும் தொகையாகும். 

‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பது தமிழர் வாழ்வியல். ஐங்குறுநூற்றின் முதல் நூறு ‘மருதத் திணைப்’ பாடல்களைப் பாடியவர் ‘ஓரம்போகியார்’. புரவலர்களைச் சிறப்பாகப் புரந்தவன் ‘செல்வக் கடுங்கோ வாழியாதன்’. அவனது வழித்தோன்றல் ‘அவினி’ என்பான். இருவரும் தமது வள்ளன்மையால் சிறப்பு பெற்றிருந்தனர். இந்நூறு பாடல்களை எழுவதற்கான ஊக்கமாகத் திகழ்ந்தோனும் அவினியே. அதனால், அவர்களையே தொடக்கமாக வாழ்த்தித் தமிழர் பண்பாடு போற்றி அமைகிறார் புலவர். 

ஐங்குறு நூற்றின் முதல் திணையாக ‘மருதம்’ வைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்பன தொடர்ந்து வருவன ஆகும். ஒவ்வொரு திணையிலும் நூறு பாடல்கள். மருதத் திணையில் முதல் பத்து பாடல்கள் ‘வேட்கைப் பத்து’ எனப்படும். ‘வேட்கை’ எனும் விருப்பமே பாக்களில் விரவி நிற்பதால் இப்பெயர் அமைந்தது எனலாம்.